விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதிக்குச் செல்லும் ரயில்வே தரைப்பாலம் சீரமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில், ரஜாக் லே-அவுட், ஏ.டி.எஸ்., காலனி, பெரியார் நகர், இந்திரா நகர், பாலாஜி நகர், கட்டபொம்மன் நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இப்பகுதி மக்கள், மருத்துவமனை உள்ளிட்ட அவசரத்திற்கு நகர பகுதிக்கு செல்ல முடியாமல், ரயில்வே கேட் தடையாக இருந்தது. இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ரயில்வே தரைப்பாலம் கடந்த 2000ம் ஆண்டு ஜூன் நெடுஞ்சாலை கிராமப் பணித்துறை மூலம், 1.50 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது. இதனை, நகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. மழைக்காலங்களில், தரைப்பாலத்தினுள் தேங்கி நிற்கும் தண்ணீர், மின்மோட்டார் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.கடந்த 24 ஆண்டுகளாக, இப்பகுதி மக்கள், தரைப் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். தரைப் பாலத்தையொட்டி, இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் நடந்து செல்ல வசதி செய்யப்பட்டது. இந்த நடைபாதையின் பக்கவாட்டில் தடுப்பு சுவர் அமைக்கப்படாததால், மக்கள் ஆபத்தான முறையில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், படிக்கட்டுகள் சேதமடைந்து, நடந்து செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால், ஆபத்தை உணராமல் வயதான முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பலரும், ரயில்வே மேம்பாலத்தின் மீதுள்ள தடுப்பு வேலியை தாண்டி, தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.எனவே, நடைபாதை படிக்கட்டுகளை சீரமைத்து, பக்கவாட்டு தடுப்பு கட்டை அமைக்கவும், தரைப் பாலத்தின் உள்பகுதியில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- நமது நிருபர் -