தி.மு.க., பேனர் கிழிப்பு: போலீசில் புகார்
வானுார்: வானுாரில் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்ட வரவேற்பு பேனரில் தெற்கு மாவட்ட பொறுப்பாளராக படம் சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு நிலவியது.விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் இருந்த கவுதம சிகாமணி, தெற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக விழுப்புரம் தொகுதி லட்சுமணன் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து, அவர் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வானுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் திருச்சிற்றம்பலம் என்.பி.ஆர்., திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதனையொட்டி மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ.,வை வரவேற்க, நிர்வாகிகள் பேனர் வைத்தனர்.பேனரில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர்உதயநிதி, அமைச்சர் பொன்முடி, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி ஆகியோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன.இரண்டு பேனர்களில் மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணியின் படத்தை மட்டும் மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். பேனரை கிழித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் முரளி, ஆரோவில் போலீசில் புகார் அளித்துள்ளார்.