| ADDED : ஜூன் 30, 2024 11:34 PM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது, விழுப்புரம் தொகுதி வேட்பாளர்களின் இறுதிக் கட்ட தேர்தல் செலவின கணக்குகள், தேர்தல் செலவின பார்வையாளரால் ஆய்வு செய்யப்பட்டது.விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்கள் குறித்த முதல் கட்ட ஆய்வு கூட்டம், விழுப்புரத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. இதனையடுத்து, இரண்டாம் கட்ட செலவினம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஏப்ரல் 16ம் தேதியும், மூன்றாம் கட்ட ஆய்வுக்கூட்டம் ஜூன் 6ம் தேதியும் நடந்தது. இதனையடுத்து, இறுதிக் கட்டமாக நேற்று காலை நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பழனி தலைமை வகித்தார். தேர்தல் செலவின பார்வையாளர் ராகுல் சின்கானியா, 16 வேட்பாளர்களின் செலவின கணக்குகளையும் ஆய்வு செய்தார்.உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் ஞானவேல், ஐயப்பன், கணக்கு அலுவலர்கள் ஆனந்தன், ரமேஷ் உள்ளிட்ட கணக்கு குழுவினர், வேட்பாளர்கள் தரப்பில் சமர்பிக்கப்பட்ட தேர்தல் செலவின விபரங்களை, ஆவணங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.தொடர்ந்து, வரும் 4ம் தேதி வரை இந்த செலவின கணக்கு ஆய்வு நடைபெறும், அதன் பிறகு, தேர்தல் துறை இணையத்தில், வேட்பாளர்களின் செலவின கணக்குகள் பதிவேற்றம் செய்யப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.