| ADDED : ஜூலை 06, 2024 04:19 AM
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர், ஆளும் கட்சியை விமர்சித்து, போஸ்டர் ஒட்டி பிரசாரம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க., சிவா, பா.ம.க., அன்புமணி, நாம் தமிழர் கட்சி அபிநயா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் களத்தில் உள்ளனர். அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களிடையே சுயேச்சை வேட்பாளர்களும் ஓட்டு கேட்டு வருகின்றனர். இதில், சுயேச்சை வேட்பாளர் ராஜா ஸ்டாலின், வைரம் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். இவருக்கு ஆதரவாக விழுப்புரம், விக்கிரவாண்டி பகுதியில் பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.வன்னியர் கல்வி இயக்கம் என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், மூன்று தலைமுறைகளாக வன்னியர்களுக்கு நாமம் போடும் தி.மு.க., என்றும், கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதியின் கார்டூன் படங்களைப் போட்டு விமர்சித்துள்ளதோடு, வன்னியர் இடஒதுக்கீடை வென்றிட விக்கிரவாண்டியில் போட்டியிடும் ராஜா ஸ்டாலினுக்கு ஆதரவளிக்கும்படி குறிப்பிட்டுள்ளனர்.ஏற்கனவே பா.ம.க., நாம் தமிழர் கட்சியினர், ஆளும் கட்சியை விமர்சித்து வரும் நிலையில், சுயேச்சைகளும் விமர்சித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.