கண்டாச்சிபுரம் அருகே சிறுத்தை நடமாட்டம்; வனத்துறையினர் விசாரணை
கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறிய பகுதிகளில், வனத்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர். கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் வனப்பகுதிக்கு உட்பட்ட திப்பக்காடு மற்றும் மலைப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கடந்த 21ம் தேதி தினமலர் நாளிதழில் செய்தி வௌியானது. இதுகுறித்து, தாசில்தார் கிருஷ்ணதாஸ், கலெக்டர் மூலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், வனத்துறையினர் நேற்று சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளாக கருதப்படும் அடுக்கம், ஒட்டம்பட்டு, கல்லந்தல் உள்ளிட்ட பகுதி பொதுமக்களிடம் விசாரித்தனர்.