விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிவாவை ஆதரித்து, கைத்தறி மற்றும் துணி நுால்துறை அமைச்சர் காந்தி ஓட்டு சேகரித்தார்.கப்பியாம்புலியூர் காலனி பகுதியில் வீடு, வீடாகச் சென்று ஓட்டு சேகரித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரவி துரை, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி, அரக்கோணம் நகர செயலாளர் ஜோதி, ஒன்றிய செயலாளர்கள் பசுபதி, வடிவேல், நகர மன்ற தலைவர் லட்சுமி பிரியா மற்றும் தி.மு.க., கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.முன்னதாக, அமைச்சர் பேசுகையில், 'விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் சிவாவை, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், பெண்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், அரசு பள்ளிகளில் பயின்று கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதாந்திர உதவிதொகை வழங்கப்படுகிறது. மக்களுக்கான ஆட்சியை நடத்தி வரும் முதல்வரின் கரத்தை வலுப்படுத்கும் வகையில், பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக தி.மு.க., வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்' என்றார்.