உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வின் அவைத்தலைவராகிறார் அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,வின் அவைத்தலைவராகிறார் அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் பதவி பறிக்கப்பட்ட அமைச்சர் மஸ்தான், மாவட்ட அவைத்தலைவர் பதவியை பிடிப்பதற்கு தீவிரம் காட்டி வருகின்றார்.விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளராகவும், சிறுபான்மை நலத்துறை அமைச்சராக இருந்தவர் மஸ்தான். விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடிக்கும், மஸ்தானுக்கும் கோஷ்டி பூசல் உச்சகட்டத்தில் இருந்து வருவது குறித்து, கட்சி தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. லோக்சபா தேர்தல் முடிவு வெளியான நிலையில்,கட்சி தலைமை அதிரடியாக அமைச்சர் மஸ்தான் வசம் இருந்து வந்த, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் பதவியை பறித்தது.இதற்கு பதிலாக அமைச்சர் மஸ்தான் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக இருந்து வந்த, அமைச்சர் மஸ்தானின் தீவிர விசுவாசியான திண்டிவனத்தை சேர்ந்த டாக்டர் சேகரை, விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., பொருப்பாளராக நியமித்தது.இந்நிலையில், கட்சியின் அதிகார பூர்வ பத்திரிக்கையில், கடந்த 13ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதில், டாக்டர் சேகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், காலியாக உள்ள விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், 17 ம் தேதி(நேற்று) கட்சி தலைமைகழகத்தில் அவைத்தலைவர் போட்டியிட விரும்புகிறவர்கள் அதற்கான விண்ணப்பத்தை ரூ.25 ஆயிரம் செலுத்தி, பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் மஸ்தான் பரிந்துரையின் பேரில்தான், கட்சி தலைமை மாவட்ட பொறுப்பாளராக டாக்டர் சேகரை நியமித்தது. அதே போல் அமைச்சர் மஸ்தான் சொல்பவர்தான் மாவட்ட அவைத்தலைவராக வருவதற்கு வாய்ப்பு உள்ளது.இதற்கிடையில் திடீர் திருப்பமாக, அமைச்சராக உள்ள மஸ்தானே, விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.இதற்கிடையில் அமைச்சர் பொன்முடியின் ஆதரவளராக உள்ள திண்டிவனம் முன்னாள் நகர செயலாளர் கபிலனும் மாவட்ட அவைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் பொருட்டு, நேற்று காலை சென்னையிலுள்ள கட்சி தலைமை அலுவுலகத்திற்கு ஆதரவாளர்களுடன் சென்றார். கட்சி தலைமை நிர்வாகிகள், வேட்பு மனு தாக்கல் செய்வதை தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி தேர்தல் நடத்தாமல் முடிவு எடுங்கள் என்று கபிலன் தரப்பினரிடம் அறிவுரை கூறி அனுப்பி வைத்தது.இதன் காரணமாக, தற்போது அமைச்சராக உள்ள மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக வருவதற்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்