உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் அருகே பல்லவர் கால அரிய முருகன் சிற்பம்: பாதுகாக்க கோரிக்கை

விழுப்புரம் அருகே பல்லவர் கால அரிய முருகன் சிற்பம்: பாதுகாக்க கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே யானையின் மீது முருகன் அமர்ந்து வரும் பல்லவர் கால அரிய சிற்பத்தைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் கிராமத்தில், திறந்த வெளியில் மிகப்பழங்கால முருகன் சிற்பம், பராமரிப்பின்றி சிதைந்து வருவதாக கிடைத்த தகவலை அடுத்து, அதனை நேரில் சென்று பார்வையிட்ட விழுப்புரம் வரலாற்று ஆர்வலர் குழுவினர், அதனை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: தமிழ்க் கடவுளான முருகனுக்கு, தொடக்க காலத்தில் வாகனமாக யானை இருந்துள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களான அகநானூறு, பதிற்றுப்பத்தில், இதுபற்றி குறிப்பிடுகின்றன. இவற்றை மெய்ப்பிக்கும் வகையில், யானையின் மீது முருகன் அமர்ந்திருக்கும் அழகிய சிற்பம், விழுப்புரம் அருகே உள்ள ஆனாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தச் சிற்பம் முற்கால பல்லவர் காலத்தை ( கி.பி.6-7ம் நூற்றாண்டு) சேர்ந்ததாகும். தமிழகத்தில் காணப்படும் முருகன் சிற்பங்களில், இது அரியதாக கருதப்படுகிறது. ஆனால், இந்த சிற்பம் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை. ஆனாங்கூர் குளக்கரை எதிரே திறந்த வெளியில் முருகன் சிற்பம் தரையில் வைக்கப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள சுற்று சூழல் சுகாதாரமற்று காணப்படுகிறது.1300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிற்பம் ஒன்று, பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவது வருத்தமளிக்கிறது. வரலாற்றுச் சிறப்பும், தொன்மையும் வாய்ந்த முருகன் சிற்பத்தை எடுத்து பாதுகாக்க, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை