| ADDED : மே 03, 2024 10:02 PM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே ஒலக்கூர் கோவில் திருவிழா பிரச்னை குறித்து, டி.எஸ்.பி.,யிடம் எம்.எல்.ஏ., பேச்சு வார்த்தை நடத்தினார்.திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அங்கு கூழ் ஊற்றுவது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இது குறித்து ஒலக்கூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.இந்த பிரச்னை தொடர்பாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்க திரவுபதி அம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சியின் போது கச்சேரி நிகழ்ச்சி நடத்தக்கூடாது என போலீசார் திடீர் தடை விதித்தனர்.அதனைத் தொடர்ந்து, திரவுபதி அம்மன் கோவில் நிர்வாகி ஆதிகேசவன் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள், அர்ஜூனன் எம்.எல்.ஏ., ஆகியோர் டி.எஸ்.பி., சுரேஷ் பாண்டி யனை நேற்று காலை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, ஆண்டு தோறும் நடைபெற்று வரும் கச்சேரி நிகழ்ச்சியை தடுக்காமல், கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.அதற்கு, போலீஸ் பாதுகாப்புடன் திருவிழாவில் கச்சேரி நடத்துவற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., தெரிவித்தார்.