விழுப்புரத்தில் பழமை வாய்ந்த ரயில்வே மருத்துவமனை, படிப்படியாக மூடப்பட்டு வருவதற்கு ரயில்வே ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.விழுப்புரம்: ரயில்வே ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் குடும்பத்தினர் நலனுக்காக, ரயில்வே துறை தனி மருத்துவமனைகளை அமைத்து சேவையளித்து வருகிறது.தெற்கு ரயில்வே திருச்சி கோட்டத்தில், திருச்சி தலைமை மருத்துவமனையும், விழுப்புரத்தில் துணை கோட்ட மருத்துவமனையும், 8 சுகாதார மையங்களையும் அமைத்து, நீண்டகாலமாக சேவை அளித்து வருகின்றன.ரயில்வே ஊழியர்களுக்கு திடீர் உடல் நல குறைபாடு, விபத்தில் சிக்கினாலும் உடனடி இலவச சிகிச்சை பெறவும், மாதாந்திர உடல் பரிசோதனைக்கும், அவர்களது குடும்பத்தினர் சிகிச்சை பெறவும் தனித்துவமாக இந்த மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன.இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள ரயில்வே மருத்துவமனையை படிப்படியாக மூடும் நடவடிக்கையில், ரயில்வே துறை ஈடுபட்டுள்ளதாக, அதன் ஊழியர்கள், குடும்பத்தினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் கூறியதாவது:விழுப்புரம் ரயில்வே காலனியில் கடந்த 1966ம் ஆண்டு, மே 6ம் தேதி தொடங்கிய இந்த மருத்துவமனை, தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. 4 டாக்டர்கள், 9 நர்சுகள், 16 உதவியாளர்கள் உள்ளிட்ட 45 பேர் பணியாற்றி வந்தனர். 26 படுக்கை வசதிகள் இருந்தது. தற்போது, அதன் சேவை படிப்படியாக குறைந்து, 2 டாக்டர்கள், 19 ஊழியர்கள் என ஆட்குறைப்பால் நலிந்துள்ளது.கொரோனா காலத்தில், கடந்த 2020ம் ஆண்டு தற்காலிகமாக மூடப்பட்ட மருத்துவ சேவைகள், தொடர்ந்து படிப்படியாக முடக்கி விட்டனர். தற்போது, இந்த சப் டிவிஷன் மருத்துவமனையை, சிறிய சுகாதார மையமாக (ஹெல்த் யூனிட்) மாற்றும் திட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அப்படி மாற்றினால், பகுதி நேரம் இயங்கும் கிளினிக் போல், ஒரு டாக்டர், 4 ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள்.விழுப்புரம் ரயில் நிலைய வட்டாரத்தில் 1,700 ஊழியர்கள் மற்றும் கடலுார், உளுந்துார்பேட்டை, திண்டிவனம், விருத்தாசலம், வேலுார், புதுச்சேரி ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அவசர, அத்தியவசிய மருத்துவ சேவைக்கு தற்போது தவிக்க வேண்டியுள்ளது.விபத்து, உடல் நலக்குறைவு போன்றவற்றிற்கு, தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று, அதிகம் செலவிட வேண்டியுள்ளது. சென்னை, திருச்சி ரயில்வே மருத்துவமனைக்கு, மேல் சிகிச்சைக்கு செல்லும் நிலை உள்ளது.விபத்து உள்ளிட்ட பெரிய அளவிலான மருத்துவ உதவிக்கு, புதுச்சேரி அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லுாரிக்கு, ரயில்வே நிர்வாகம் பரிந்துரைக்கிறது.ரயில்வே தொழிலாளர்கள், அலுவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் நலன் கருதி, இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தி, மேம்பட்ட சேவையளிக்க வேண்டிய நிலையில், மருத்துவமனையின் தரத்தை குறைத்து, சுகாதார மையமாக மாற்றுவது ஏற்புடையதல்ல.மருத்துவமனையை தரம் உயர்த்தி, உள்புற சிகிச்சை வசதியையும், மாதம் ஒரு முறை சிறப்பு மருத்துவர்கள் முகாமிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழியர்கள் தரப்பில், நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம்.இவ்வாறு ஊழியர்கள் கூறினர்.இந்நிலையில், ரயில்வே வாரிய சுகாதாரத்துறை இயக்குனர் மான்சிங், விழுப்புரம் ரயில்வே மருத்துவமனைக்கு, நேற்று மாலை நேரில் ஆய்வு செய்து, மருத்துவமனை நிலை குறித்து கேட்டறிந்துள்ளார்.திருச்சி கோட்ட மருத்துவ கண்காணிப்பாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் இருந்துள்ளனர். அப்போது, ரயில்வே ஊழியர்கள் சங்கத்தினர், தங்களது கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.