உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நந்தன் கால்வாயில் தண்ணீர் செல்வதில் ஏற்பட்டுள்ள தடை அகற்ற கோரிக்கை

நந்தன் கால்வாயில் தண்ணீர் செல்வதில் ஏற்பட்டுள்ள தடை அகற்ற கோரிக்கை

செஞ்சி: நந்தன் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றிட வேண்டும் என நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நந்தன் கால்வாய் பாதுகாப்பு சங்கம் சார்பில் கால்வாய் துவங்கும் கீரனுார் அணைக்கட்டில் இருந்து சங்க செயலாளர் வெற்றி தமிழ் செல்வன் தலைமையில் ஒரு குழுவும், கால்வாய் முடிவடையும் பனமலை ஏரியில் இருந்து சங்கர் தலைமையில் ஒரு குழுவும் கால்வாயில் உள்ள தடைகள், நீர் வரத்து குறித்து கள ஆய்வு செய்தனர். இரண்டு குழுக்களும் சோ.குப்பம் பொத்தேரி கரையில் பயணத்தை முடித்தனர். அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கார்வண்ணன், வேல்முருகன், சீனுவாசன், ஸ்ரீதர், முருகன், தில்லைராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் அன்பழகன் வரவேற்றார்.ஒருங்கிணைப்பாளர் அறவாழி, செயலாளர் கன்னிகா ரமேஷ்பாபு, தொழிலதிபர் ரவிச்சந்திரன், முருகன், தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில செயலாளர் அய்யனார், செஞ்சி தாலுகா தலைவர் ஆரியபுத்திரன், காஜா மொய்தீன், கலிவரதன், அய்யனார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கூட்டத்தில், நந்தன் கால்வாயில் பொத்தேரியில் துவங்கி தேவதானம்பேட்டை வரை உள்ள வனப்பகுதியில் மண் சரிந்தும், புதர்கள் மண்டி இருப்பதால் பொத்தேரிக்கு முன்பாக தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே தடைகள் உள்ள 300 மீட்டர் துாரத்திற்கு அடைப்புகளை அகற்றி பனமலை ஏரிக்கு தண்ணீர் செல்ல பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்பெண்ணை-பாலாறு நதிகள் இணைப்பு திட்டத்தை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும், ஒவ்வொரு மாதமும் கலந்தாய்வு கூட்டம் நடத்தவும், அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !