விழுப்புரம் : விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி., சாட்சியம் அளித்தார்.விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை செம்மண் குவாரியில் அதிக மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக உள்ளனர். அதில், 26 பேர் சாட்சியம் அளித்ததில், 22 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சதானந்தன், கோதகுமார், கோபிநாத், ராஜமகேந்திரன் ஆஜராகினர். விசாரணையின்போது, திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த, தற்போது உளுந்துார்பேட்டை டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வரும் மகேஷ், ஆஜராகி சாட்சியம் அளித்தார்.அப்போது அவர், இவ்வழக்கு தொடர்பாக, அப்போதைய மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., அறிவுரைப்படி, ராஜமகேந்திரன் வீட்டில் சோதனை செய்தோம். இந்த சோதனையின்போது, வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.அது குறித்த சோதனை அறிக்கை, மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் சமர்பித்ததாக, சாட்சியம் அளித்தார்.இந்த சாட்சியத்தை பதிவு செய்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை ஜூன் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.