உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நகராட்சி கமிஷனருக்கு நன்றி: பா.ஜ., போஸ்டரால் பரபரப்பு; அதிரடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள்

நகராட்சி கமிஷனருக்கு நன்றி: பா.ஜ., போஸ்டரால் பரபரப்பு; அதிரடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள்

விழுப்புரம் : விழுப்புரத்தில் நகராட்சி கமிஷனரை கண்டித்து நுாதன முறையில் நன்றி தெரிவித்து பா.ஜ., சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிகாரிகள் களத்தில் இறங்கி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 28வது வார்டில் உள்ள வி.மருதுார் பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த பகுதிக்கு நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மருதுார், நரசிங்கபுரம், சந்தானகோபாலபுரம் பகுதிகளில் தினசரி தடையின்றி குடிநீர் விநியோகம் நடந்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களாக குடிநீரில், கழிவு நீர் கலந்து வருவதோடு, துர்நாற்றம் வீசி வருவதாக பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.இது குறித்து, நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியை சேர்ந்த தெற்கு மாவட்ட பா.ஜ., இளைஞரணி சார்பில், நகராட்சி கமிஷனர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நுாதன போஸ்டர் விழுப்புரம் நகரில் நேற்று ஒட்டப்பட்டுள்ளது.அதில், 'வி.மருதுார் மற்றும் பல பகுதிகளில் சாக்கடையோடு கலந்த குடிநீர் வழங்கி பல குழந்தைகள், முதியோர்களை நோயாளிகளாக்கி மக்களை சந்தோஷப்படுத்தும் நகராட்சி கமிஷனர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு நன்றி' என தெரிவிக்கப்பட்டுள்ளது.நகராட்சி கமிஷனர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை கிண்டலடித்து ஒட்டப்பட்டுள்ள இந்த நுாதன போஸ்டர், விழுப்புரம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனையறிந்த நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கமிஷனர் ரமேஷ் ஆகியோர் நேற்று வி.மருதுார் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். நகராட்சி ஊழியர்கள் மூலம், கழிவு நீர் கலப்பதை கண்டறிந்து நடவடிக்கும் எடுக்கும் பணி முடுக்கி விடப்பட்டது.இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இப்பகுதியில் 50 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சில இடங்களில், பாதாள சாக்கடை கழிவு நீர் கசிந்து, குடிநீரில் கலந்துள்ளது. கடந்த வாரம் இதுபோன்ற கசிவை கண்டிறிந்து சரி செய்தோம்.மீண்டும் ஏற்பட்டுள்ளதால், பள்ளம் எடுத்து, குழாய்களில் கசிவு ஏற்படும் இடம் குறித்து கண்டறியும் பணி நடக்கிறது. நாளைக்குள் (இன்று) கண்டறியப்பட்டு, சரி செய்யப்படும். இல்லாவிட்டால், புதிய பைப் லைன்கள் மாற்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி