| ADDED : ஜூலை 25, 2024 11:13 PM
ஆக்கிரமிப்பு இடத்தை முறைப்படி அளவீடு செய்து, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், அரசு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் அரசு புறம்போக்கு இடங்கள், செல்வாக்கு மிக்க நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.மேலும், சில இடங்களில் உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை அனுமதி பெற்று, தனியார் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்கள் கூட அரசு இடத்தில் உள்ளதாகவும். அரசுக்கு புகார் செல்கின்றன.இந்நிலையில், ஒரு சில இடங்களில் இடத்தை அளவீடு செய்யாமல், ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான நோட்டீஸ் நடவடிக்கை துவக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, முறைப்படி தகவல் அளித்து, அவர்களின் முன்னிலையில் இடத்தை அளவீடு செய்ய வேண்டும் என கள்ளக்குறிச்சி கலெக்டருக்கு மனு அளிக்கப் பட்டது.இதையடுத்து இடத்தின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்காமல் ஆதாரமின்றி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதிகாரிகள் அவசரமாக நோட்டீஸ் அனுப்பக் கூடாது. முறைப்படி ஆக்கிரமிப்பை உறுதி செய்த பின், அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோர்ட் வழிகாட்டுதலின்படி சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அரசுத்துறை அதிகாரிகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது-நமது நிருபர் -.