திண்டிவனம் பத்திரப்பதிவு ஆபீசில் ரெய்டு
திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சந்தைமேட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில், பத்திரப்பதிவுகளுக்கு லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை பொறுப்பு டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையில், 10 பேர் குழுவினர் நேற்று முன்தினம் மாலை 3:30 மணிக்கு பத்திரப்பதிவு அலுவலகத்தில் கதவுகளை மூடினர்.உடன் அலுவலகத்தில் இருந்த பலர் தாங்கள் வைத்திருந்த பணம், நகை மற்றும் ஆவணங்களை ஜன்னல் வழியாக வெளியே வீசினர். அப்போது வெளியில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவற்றை கைப்பற்றினர். அதில், பெண் ஒருவர் வீசிய கைப்பையில், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 4 சவரன் நகை இருந்தன. உரிய ஆவணங்களை காண்பித்த பின், 1 லட்சம் பணம், 4 சவரன் நகைகளை தவிர பிற பணம், மொபைல் போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.இரவு, 7.30 மணி வரை நடந்த சோதனையில் அலுவலகத்தில் பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்திருந்த, 2 லட்சத்து, 28,760 ரூபாயை கைப்பற்றினர். சார் - பதிவாளர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் திண்டிவனம் கவுரி உட்பட 10 பேர் மீது, நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.