கோஷ்டி கோஷ்டியாக செயல்படும் திண்டிவனம் தி.மு.க., கவுன்சிலர்கள்
திண்டிவனம் நகர்மன்ற தலைவராக இருப்பவர் ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்மலா ரவிச்சந்திரன். நகராட்சியில் மொத்தமுள்ள 33 கவுன்சிலர்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 26 கவுன்சிலர்கள் உள்ளனர்.ஆரம்பத்தில் கவுன்சிலர்கள் ஒன்றாக இருந்து வந்த நிலையில் , பின்பு மஸ்தான், பொன்முடி ஆதரவு கவுன்சிலர்கள் என பிரிந்தனர். இதனால் நகர்மன்ற கூட்டத்தில் மஸ்தான் ஆதரவு கவுன்சிலர்களும், பொன்முடி ஆதரவு கவுன்சிலர்களுக்கும் முட்டல், மோதல், வெளிநடப்பு செய்து பிரச்னையை கிளப்பி வந்தனர்.சமீபத்தில் மஸ்தானிடமிருந்த அமைச்சர் பதவி, மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட சமயத்தில், நகர்மன்ற கூட்டத்தில் இரு கோஷ்டியினரும் ஒன்றாக இணைந்து மோதல் இல்லாமல் அடக்கி வாசித்தனர்.இந்நிலையில் மஸ்தானுக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி கிடைத்துவிட்டது. இதனால் பொன்முடி கோஷ்டி கவுன்சிலர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதற்கிடையில் நகராட்சி ஒப்பந்த பணிகளுக்கு பொன்முடி கோஷ்டி கவுன்சிலர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு வந்தது. கடைசியில் துறை அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து, அவருடைய பரிந்துரையின் பேரில் சில ஒப்பந்த பணிகள் பொன்முடி கோஷ்டி கவுன்சிலருக்கு கிடைத்தது.சமீபகாலமாக நகராட்சி ஒப்பந்த பணிகள் எதிர்கட்சியான அ.தி.மு.க.,ஆதரவு ஒப்பந்ததரர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.நகராட்சியில் ஆளுங்கட்சி கவுன்சிலர்களுக்குள் நிலவும் கோஷ்டி பிரச்னையை கட்சி தலைமை தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்தால்தான், அடுத்து நடைபெறும் உள்ளாட்சி தேர்தலின் போது, ஆளுங்கட்சிக்கு சாதகமான முடிவு கிடைக்கும்.