விழுப்புரம்: விழுப்புரத்தில் போக்குவரத்து விதி மீறல்கள், பைக் ஓட்டிகளின் அட்டகாசங்கள் கட்டுப்படுத்தப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விழுப்புரத்தில் வாகனங்கள் அதிகரித்து, போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதிகளை மதிக்காமல், கண்டபடி இயக்குவதும், கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதும், நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் அதிகரித்து, ஏராளனமான வாகன ஓட்டிகளிடம் அடிப்படையான லைசென்ஸ் கூட இருப்பதில்லை. இதனால், கத்துக்குட்டியாக இளைஞர்கள், மாணவர்கள் பைக்குகள் எடுத்து வருவதும், கண்டபடி இயக்குவதாலும் மேலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி வருகிறது.பிரதான நேருஜி சாலை, திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை, மாம்பழப்பட்டு சாலை, கிழக்கு பாண்டி ரோடு போன்ற சாலைகளில், அதிகளவு வாகன நெரிசலை முறைப்படுத்தப்படுவதில்லை.மேலும் போக்குவரத்து நெரிசலுக்கு, முறைப்படுத்தாமல் இயங்கும், ஷேர் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களும், முறையாக பார்க்கிங் செய்யாததும் காரணமாகிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், போக்குவரத்து போலீசார் மற்றும் உள்ளூர் போலீசாரும் அடிக்கடி சாலையில் சென்று வரும் போதெல்லாம், வாகன விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுத்து எச்சரித்தபடி செல்வார்கள். போக்குவரத்து போலீசாரும் அடிக்கடி வாகன சோதனை நடத்தி, ஆட்டோக்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுத்தனர்.இதுபோன்ற நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்படுவதில்லை. இதனால், எப்படியும் வாகனங்களை ஓட்டலாம். எங்கும் நிறுத்தலாம் என்ற நிலைஏற்பட்டுள்ளது.போக்குவரத்து போலீசாரும், ஆள் பற்றாக்குறையால், தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் டிராபிக் பிரச்னை, வி.ஐ.பி., பாதுகாப்பு என செல்வதால், முழுமையாக கவனிக்க முடியவில்லை என்கின்றனர்.விழுப்புரத்தில், இதுபோல் கண்டபடியாக இயக்கப்படும், பார்க்கிங் செய்யப்படும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, அந்தந்த சந்திப்புகளிலும் அடிக்கடி போக்குவரத்து போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் எஸ்.பி., - டி.எஸ்.பி., ஆகியோரும், போக்குவரத்து நெரிசல் பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.