விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க., மற்றும் பா.ம.க., வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதற்கான மனுதாக்கல் கடந்த 14ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் வரை 7 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்நிலையில், நேற்று காலை 11:15 மணிக்கு தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா (எ) சிவசண்முகம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் மனு தாக்கல் செய்தார். அமைச்சர் பொன்முடி, எம்.பி.,க்கள் ஜெகத்ரட்சகன், ரவிக்குமார், தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி உடனிருந்தனர்.மதியம் 2:20 மணிக்கு பா.ம.க., வேட்பாளர் அன்புமணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் இரு மனுக்களை தாக்கல் செய்தார். அப்போது, பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் மணி, பா.ஜ., மாநில துணைத் தலைவர் சம்பத், அ.ம.மு.க., அமைப்பு செயலாளர் கணபதி, பா.ஜ., கலிவரதன் உடனிருந்தனர்.இவர்களை தொடர்ந்து தி.மு.க.,வின் மாற்று வேட்பாளராக அன்னியூர் சிவா மனைவி வனிதா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 9 பேர் மனு தாக்கல் செய்தனர். தொகுதியில் இதுவரை மொத்தம் 19 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை 21ம் தேதி மாலை 3:00 மணியுடன் மனுதாக்கல் முடிவடைகிறது.
அடித்து சொல்கிறார் பொன்முடி
தி.மு.க., வேட்பாளர் மனு தாக்கலை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது: கடந்த தேர்தலில் அ.தி.மு.க.,-பா.ம.க.,- பா.ஜ., கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளரை விட மறைந்த புகழேந்தி 9,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழக முதல்வரின் பல்வேறு சிறப்பு திட்டங்களில் பெண்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். அதனால், இத்தேர்தலில் பெண்கள் ஓட்டுகள் தி.மு.க.,விற்கு நிச்சயம் விழும். இத்தேர்தலில் தோல்வி பயத்தில் அ.தி.மு.க., விலகி கொண்டதால் தி.மு.க., 1 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்' என்றார்.