உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கரும்பில் வெள்ளை வேர்புழு தாக்குதல்; கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

கரும்பில் வெள்ளை வேர்புழு தாக்குதல்; கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை

செஞ்சி : கரும்பு பயிரில் வெள்ளை வேர்புழு தாக்கு தலைக் கட்டுப்படுத்த ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை சார்பில் முகாம்களை நடத்தி வருகின்றனர். ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை செய்திக்குறிப்பு: தற்போது செஞ்சி மற்றும் முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் விவசாயிகள் புதிய கரும்பு நடவு செய்வதோடு கட்டைக் கரும்பு பராமரிப்பு வேலைகளையும் செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு, கரும்பு பயிர்களில் வேர்ப்புழு தாக்குதல் பரவலாக காணப் பட்டது. முக்கியமாக சென்ற ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் அவலுார்பேட்டை, ஆவூர் மற்றும் கெடார், சூரப்பட்டு, கஞ்சனூர் பகுதியிலும் வெள்ளை புழுவின் தாக்குதல் அதிகமாக தென்பட்டது.இதையடுத்து உயிரியல் முறையிலும், இரசாயன மருந்துகளை கொண்டும் இப்பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டது.வேர் புழுக்களை உற்பத்தி செய்யும் தாய் வண்டுகள், கோடை மழை பெய்தவுடன் மண்ணிலுள்ள கூட்டுப் புழுவிலிருந்து வெளியே வந்து, அதற்கு உண்டான உணவான வேப்பமர கொழுந்தினை உண்டு இனப்பெருக்கம் செய்து பெண் வண்டுகள் அருகில் உள்ள கரும்பு வயல்களில் மண்ணிற்குள் முட்டைகளை இடுகிறது.ஒவ்வொரு தாய் வண்டுகளும் 60ல் இருந்து 70 முட்டைகள் வரை இடும். இம் முட்டைகள் பொரித்து புழுக்களாக மாறும். அப்புழுக்கள் கரும்பின் வேர்ப்பகுதியை தாக்குகிறது. இப்புழுக்கள் கரும்பின் வேர் பகுதியில் உள்ள திசுக்களை உண்ணுவதால் கரும்பு வேரோடு சாய்ந்து கரும்பு காய்ந்த நிலையில் மகசூல் இழக்க நேரிடும்.இத்தாக்குதலை கட்டுப்படுத்த உயிரியல் மற்றும் ரசாயன மருந்துகளைப் பயன்படுத்தி கரும்பின் வேர் பகுதியில் ஊற்றலாம். இதனை விட வண்டுகளை முதலிலேயே பிடித்து அழித்தலே சிறந்தது.இதனால் வண்டுகள் முட்டை இடுவது தடுக்கப்படுவதோடு கரும்பு பயிரும் புழுக்கல் தடுக்குதலிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.இதனைக் கருத்தில் கொண்டு ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலையின் கரும்பு களப்பணியாளர்கள் செஞ்சி மற்றும் முண்டியம்பாக்கம் ஆலைக்குட்பட்ட பகுதி களில் பெட்ரமாக்ஸ் விளக்கு பொறிவைத்து இரவு நேரங்களில் மரத்தில் உள்ள வண்டுகளை சேகரித்து ஒரு வாலியில் ரசாயன கலவையோடு உள்ள தண்ணீரில் இட்டு அழித்து வருகின்றனர்.இச்செயலை கடந்த ஒரு வார காலமாக தினமும் இரவு நேரங்களில் மாலை 7:00 மணியில் இருந்து இரவு 10:00 மணி வரை கரும்பு விவசாயிகளுடன் இணைந்து வண்டுகளை சேகரித்து அழிக்கும் செயலை மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு செய்திக் குறிப் பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி