பள்ளத்தில் பைக் கவிழ்ந்து வாலிபர் பலி
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையோர பள்ளத்தில் பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் இறந்தார். விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன், 23; வேலுார் அடுத்த வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா, 22; நண்பர்கள். இருவரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் .நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், இருவரும் சிறுவந்தாட்டிற்கு பைக்கில் வந்தவர்கள் வேலைக்குச் செல்ல சென்னை புறப்பட்டனர். பைக்கை சரவணன் ஓட்டினார்.விக்கிரவாண்டி அடுத்த ப.மண்டபம் அருகே வந்த போது, பெஞ்சல் புயலால் உடைந்திருந்த பாலத்திற்கு முன் எச்சரிக்கையாக பேரிகார்டு வைத்திருந்ததை கவனிக்காமல் சென்ற போது, பள்ளத்தில் பைக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பின்னால் உட்கார்ந்து சென்ற ஜீவா சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்த சரவணன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.