1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால சிலைகள் கண்டெடுப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் கால சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. விழு ப்புரம் மாவட்டம், ஆலகிராமத்தினர் அளித்த தகவலில், வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பவுத்த சிலைகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன . ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது: ஆலகிராமத்தி ல் பாதியளவு மண்ணில் புதைந்த நிலையில் வைஷ்ணவி தேவி சிலை கண்டறியப்பட்டது. இது, நான்கு கைகளுடன் அமர்ந்த நிலையில் உள்ளது. முன்னிரு கைகளில் வலது கரம் அபய முத்திரையிலும், இடது கை தொடை மீது வைத்த நிலையிலும், பின்னிரு கைகளில் சங்கு, சக்கரத்தை ஏந்தியும் காணப்படுகிறது. இதேபோன்று செல்லியம்மன் கோவில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட கவுமாரி சிலை, அமர்ந்த நிலையில், நான்கு கைகளுடன் உள்ளது. இந்த வைஷ்ணவி, கவுமாரி சிலைகள், கி.பி., 10ம் நுாற்றாண்டு சோழர் காலத்தை சேர்ந்தவை. மேலும், பவுத்த சிலை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில், பவுத்தம் பரவியிருந்ததற்கு இந்த சிலை சான்றாக உள்ளது. இவ்வாறு கூறினார்.