உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆந்திராவில் இருந்து வந்த 1337 டன் காம்ப்ளக்ஸ் உரம் வினியோகம்! போதிய இருப்பு உள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை

ஆந்திராவில் இருந்து வந்த 1337 டன் காம்ப்ளக்ஸ் உரம் வினியோகம்! போதிய இருப்பு உள்ளதாக அதிகாரிகள் நம்பிக்கை

விழுப்புரம்; ஆந்திர மாநிலத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு, 1,337 டன் காம்பளக்ஸ் உர மூட்டைகள் ரயில் மூலம் வந்தடைந்தது. ஆந்திர மாநிலம், காக்கிநாடா ரயில் நிலையத்தில் இருந்து கிரிப்கோ உர நிறுவனத்தின், 1,337 டன் காம்ப்ளக்ஸ் உர மூட்டைகள், விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தன. இதனை வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில், தற்போது குறுவை நெல் சாகுபடிக்கான நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் உளுந்து, நிலக்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 2,431 டன், டி.ஏ.பி. 2,573 டன், பொட்டாஷ் 1000 டன், காம்ப்ளக்ஸ் 6,126 டன், சூப்பர் பாஸ்பேட் 1,731 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்திற்கு தேவையான உர வினியோகத் திட்ட இலக்கீட்டின் படி, உர நிறுவனங்களிடமிருந்து தொடர்ந்து உரங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் குறுவை நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. அந்த வகையில் கிரிப்கோ நிறுவனத்தில் இருந்து, 1,337 டன் காம்ப்ளக்ஸ் உர மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்தடைந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு, 337 டன் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு 50 டன், கள்ளக்குறிச்சி மாவட்ட டான்பெட் நிறுவனத்திற்கு 250 டன், பெரம்பலுார், செங்கல்பட்டு மாவட்ட டான்பெட் நிறுவனங்களுக்கு தலா 200 டன், கடலுார், திருவண்ணாமலை மாவட்ட டான்பெட் நிறுவனங்களுக்கு தலா 150 டன் உர மூட்டைகள் வினியோகம் செய்யப்பட்டன.

7

மாவட்டங்களுக்கு சப்ளை

விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கு பயன்படும் வகையில், லாரிகள் மூலம் உர மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அந்தந்த மாவட்டத்தில் நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளதாக விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ