விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், தோட்டக்கலை துறை மூலம், இந்தாண்டு 15 கோடி ரூபாய் மதிப்பில் 2,000 எக்டேர் பரப்பில், 100 சதவீதம் மானியத்துடன் நுண்ணீர் பாசன திட்ட கட்டமைப்புகள், அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில், காய்கறிகள், பழங்கள், வாழை, மரவள்ளி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் பயரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமான நெல், கரும்பு, வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்களுக்கு மாற்றாக தோட்டக்கலை பயிர்களை அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர்.இதனால், அரசு சார்பில், தோட்டக்கலை பயிர்களுக்கு, மானியத்துடன் கட்டமைப்பு வசதிகளை அரசு தரப்பில் ஏற்படுத்திக் கொடுத்து, மானிய இடுபொருள்கள், பயிரிடுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு 2024-25ம் ஆண்டில், பழங்கள், காய்கறிகள், மலர்கள் உள்ளிட்ட தோட்டப் பயிர்கள், பயிரிடும், சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதமும், சொட்டு நீர் பாசனம் கட்டமைப்புகள் நிறுவப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் அன்பழகன் கூறியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், இந்த ஆண்டிற்கு, தோட்டக்கலைத் துறை சார்பில், சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ஒரு ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரையிலும், இதர விவசாயிகளுக்கு தலா 12.50 ஏக்கர் அளவிலும், 2,000 எக்டேர் பரப்பில் 15 கோடி ரூபாய் மதிப்பில் நுண்ணீர் பாசனம் கட்டமைப்புகளை நிறுவி, பயிரிடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்து.மேலும், இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு 25 ஆயிரம் ரூபாயும், மின் மோட்டார், டீசல் மோட்டார், சூரிய மின் மோட்டார், காற்றாலை மோட்டார் அமைப்பதற்கு 15 ஆயிரம் ரூபாயும், தனியார் நீர் சேகரிப்பு அமைப்புகளை நிறுவிட 75 ஆயிரம் ரூபாயும், நிலத்தடி பாசன குழாய்கள் அமைக்க 10 ஆயிரம் ரூபாயும் பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் உரிய ஆணவங்களுடன் www.tnhorticulture.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் பதிவு செய்து, பயன்பெறலாம்.மேலும், விபரங்களுக்கு, தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகம், வட்டார உதவி இயக்குனர் அலுவலகங்களில் தொடர்பு கொண்டு விளக்கம், ஆலோசனைகளைப் பெறலாம்.மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் அன்பழகன் கூறினார்.