பெண் வயிற்றில் தேங்கிய 2.5 லிட்டர் ரத்தம் அகற்றம்
விக்கிரவாண்டி; பெண் வயிற்றில் தேங்கியிருந்த, 2.5 லிட்டர் ரத்தத்தை அகற்றி அரசு டாக்டர்கள் சாதனை படைத்தனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த தென்புத்துார் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா மனைவி பிரியா, 26; இவர், கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில், டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அடி வயிற்றில் ரத்தம் சேர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பது தெரிந்தது. மருத்துவ குழுவினர் கடந்த மாதம் 21ம் தேதி அறுவை சிகிச்சை செய்து, அவரது வயிற்றில் தேங்கியிருந்த 2.5 லிட்டர் ரத்தத்தை அகற்றினர். மேலும், பிரியாவிற்கு, 80 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. அதிக ரத்தப்போக்கு காரணமாக, ரத்தம் மற்றும் அதிகளவு ரத்த மூலக்கூறுகள் ஏற்றப்பட்டு நோயாளியை காப்பாற்றியது மருத்துவ துறையில் இதுவே முதல் முறை. பிரியாவிற்கு முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவமனையிலிருந்து நேற்று நலமுடன் பிரியா வீடு திரும்பினார் என, டீன் கீதாஞ்சலி தெரிவித்தார்.