மாவட்டத்தில் வெளுத்து வாங்கியது மழை 3 வீடுகள் சேதம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விழுப்புரம் : மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் கனமழை கொட்டியதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.மாவட்டத்தில், கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 12:00 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம், ரயில்வே தரைபாலம், திரு.வி.க., வீதி, பழைய பஸ் நிலையம், நகராட்சி மைதானம், தாமரை குளம், முத்தோப்பு, சாலாமேடு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதித்தது. மழைநீர் தேங்கிய இடங்களில் நகராட்சி சார்பில், மின் மோட்டார்கள் மூலம் மழை நீர் வடிகால் பணிகள் நடந்தது.சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கன மழையால் வாகன ஓட்டிகள் எதிர்வரும் வாகனங்கள் தெரியாமல், முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றனர். ஜானகிரபுரம் பைபாஸ் சந்திப்பு பகுதியில், மழையால் இயக்க முடியாமல், ஏராளமான கன ரக வாகனங்களை நிறுத்தி வைத்தனர். 3 வீடுகள் இடிந்து சேதம்
விழுப்புரம் அடுத்த குண்டலபுலியூரைச் சேர்ந்த ராதா என்பவரின் ஓட்டு வீட்டின் கூரை, மழையால் நேற்று காலை இடிந்து விழுந்தது. அதே பகுதியைச் சேர்ந்த ரத்னவேல் என்பவரது கூரை வீடும் இடிந்து விழுந்து சேதமானது. திருவெண்ணைநல்லுாரைச் சேர்ந்த செல்லம் மனைவி அலமேலு என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஆடு இறந்தது.
விழுப்புரத்தில் 43 மி.மீ., மழை பதிவு
மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை 8:00 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ., விபரம்:விழுப்புரம் 43, கோலியனுார் 26, வளவனுார் 25, கெடார் 31, முண்டியம்பாக்கம் 24.50, நேமூர் 23.40, கஞ்சனுார் 21, சூரப்பட்டு 24, வானுார் 40, திண்டிவனம் 20, மரக்காணம் 37, செஞ்சி 20, செம்மேடு 17, வல்லம் 17, அனந்தபுரம் 19, அவலுார்பேட்டை 20, வளத்தி 24, மணம்பூண்டி 23, முகையூர் 15, அரசூர் 20, திருவெண்ணெய்நல்லுார் 20 மி.மீ., பதிவானது. மொத்தம் 509.9 மி.மீ, சராசரியாக 25 மி.மீ., மழை பதிவானது.