கனமழையால் பாதித்த மக்களுக்கு ரூ.314 கோடி! நேரடியாக நிவாரணம் வழங்கல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், கன மழையால் பாதித்த மக்களுக்கு, அரசு சார்பில் 313. 67 கோடி ரூபாய் நிவாரணத் தொகை நேரடியாக வழங்கப்படுகிறது.விழுப்புரம் மாவட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், 37 ஆயிரத்து 611 பேருக்கு, போர்வைகள் மற்றும் பாய்கள் அரசு சார்பில், வழங்கப்பட்டுள்ளது. மேலும், 142 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தி, 7 ஆயிரத்து 841 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் கன மழை வெள்ளத்தால் கடுமையாக பாதித்த குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 4,205 பேருக்கு 4 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது.முழுமையாக வீடு இழந்த 330 குடும்பத்தினருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் என 33 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மற்றும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வழங்கிட முன்னுரிமை வழங்கப்படும்.இதேபோல், கால்நடைகள் இழப்புக்காக 581 ஆடுகளுக்கு தலா 4,000 ரூபாய், 183 பசு மாடு மற்றும் எருமை மாடுகளுக்கு தலா 37 ஆயிரத்து 500 ரூபாய் இழப்பீடு தொகை, 173 கன்று குட்டிகளுக்கு தலா 20 ஆயிரம் என 2 லட்சத்து 29 ஆயிரத்து 930 கோழி மற்றும் வாத்துகளுக்கு தலா 100 ரூபாய் வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.மேலும், மாவட்டத்தில் 72 ஆயிரத்து 334 விவசாயிகளுக்கு 2 லட்சத்து ஆயிரத்து 400 ஏக்கர் வேளாண் நிலங்கள் சேதத்திற்காக, 2.5 ஏக்கருக்கு தலா 17 ஆயிரம் ரூபாய் வீதம் 136 கோடியே 85 லட்சம் ரூபாய் 33 ஆயிரத்து 322 விவசாயிகளுக்கும்; 70 ஆயிரத்து 75 ஏக்கர் தோட்டப் பயிர்கள் சேதத்திற்காக 2.5 ஏக்கருக்கு தலா 22 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் 68 லட்சத்து 46 ஆயிரத்து 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது.மாவட்டத்தில், வீடுகள் பாதிப்புக்கு, 4.53 கோடி ரூபாய், கால்நடைகள் இழப்பிற்காக 3.56 கோடி ரூபாய், விவசாய நிலங்கள் பாதிப்புக்கு 205 கோடி ரூபாய், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 2,000 ரூபாய் என மொத்தம் 100 கோடியே 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது.மாவட்டத்தில், கன மழையால் பாதித்த பொதுமக்களுக்கு, அரசு சார்பில் 313.67 கோடி ரூபாய் தொகையை நேரடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.