| ADDED : ஜன 15, 2024 07:01 AM
வானுார் : விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில், நாவற்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக சந்தேகப்படும்படி நடந்து வந்த நபரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல் கூறினார். அவரை சோதனை செய்ததில், இடுப்பில் கத்தியை மறைத்து வைத்திருந்தார். அவரிடமிருந்து கத்தியை பறிக்க முயன்றபோது, அந்த நபர், ஆபாசமாக பேசி போலீசாரை கத்தியால் வெட்ட முயன்றார்.தப்பியோட முயன்ற அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர், நாவற்குளம் பகுதியை சேர்ந்த ஏழுமலை, 43; என்பதும், பிரபல ரவுடியான அவர் மீது ஆரோவில் மற்றும் புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் இருப்பது தெரியவந்தது.அதையடுத்து, ஏழுமலை மீது வழக்குப் பதிந்து கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.வானுார் மாஜிஸ்திரேட் வரலட்சுமி முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.