| ADDED : பிப் 11, 2024 02:00 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின்வாரியத்தின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி, இளைஞர் தனது 2 கால்களையும் இழந்துள்ளார்.விழுப்புரம் அடுத்த சோழம்பூண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே தாழ்வான நிலையில், 22 கிலோ வாட் உயர் அழுத்த மின் கம்பி செல்கின்றது. இதனை மாற்றி அமைக்கும்படி ஊராட்சி சார்பில், பூத்தமேடு துணை மின் நிலைய உதவி மின்பொறியாளருக்கு, ஓராண்டுக்கு முன் மனு அளிக்கப்பட்டது.மேலும், பள்ளி தலைமையாசிரியர் கடந்த 2022ம் ஆண்டு இரு முறை, இதே கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் அனுப்பியும், நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில் கடந்த டிசம்பர் 17ம் தேதி மாலை, அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பூபாலன்,18; தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடினார்.அப்போது பள்ளியின் மொட்டை மாடியில் பந்து விழுந்துள்ளது. இரவு நேரம் என்பதால், மறுநாள் 18ம் தேதி காலை பூபாலன், பள்ளியின் மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். முதல் நாள் இரவு பெய்த மழையால், மொட்டை மாடியில் தண்ணீர் தேங்கியுள்ளது. பந்தை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தபோது, உயர் அழுத்த மின் கம்பி பூபாலன் தலையில் உரசியதில் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின். மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவரது 2 கால்களும் முழங்காலுக்கு கீழே அகற்றப்பட்டன.அதன் பின் மாரிமுத்து, காணை போலீசில் கொடுத்த புகாரின் பேரில், கடந்த மாதம் 20ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதற்கிடையே விபத்து நடந்த மறுநாள் 19ம் தேதி அவசர அவசரமாக மின்பாதை மாற்றி அமைக்கப்பட்டது.விபத்து நடைபெறுவதற்கு 11 மாதங்களுக்கு முன்னரே, மின் பாதையை மாற்றி அமைக்காத மின்வாரிய அலட்சிய அதிகாரிகளால் இவ்விபத்து நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.