பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு நுாதன தண்டனை
விழுப்புரம்: பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், 3 மாதம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் சிறுவன் ஈடுபட இளம் சிறார் கோர்ட் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் குமார், 36; இவர், 2020 ஜன., 5ம் தேதி, விழுப்புரம் வந்தார். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், விராட்டிக்குப்பம் பைபாஸ் சாலை சந்திப்பு அருகே நடந்து சென்ற போது, பைக்கில் வந்த விழுப்புரத்தை சேர்ந்த, 17 வயது சிறுவன், குமார் மீது மோதி விபத்து ஏற்படுத்தியதால், அவர் பலத்த காயமடைந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார், சிறுவன் மீது வழக்கு பதிந்தனர். வழக்கு விசாரணை விழுப்புரம் இளம் சிறார் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி சந்திரகாசபூபதி, விபத்தை ஏற்படுத்திய சிறுவன், இன்று முதல் 2026 ஜன., 31 வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், விழுப்பு ரம் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து, போக்குவரத்தை சீர் செய்யும் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டார்.