மேலும் செய்திகள்
சோலாரில் பஸ் ஸ்டாண்ட் திறப்பு குறித்து ஆலோசனை
15-Oct-2024
திண்டிவனம் : திண்டிவனத்தில் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் நகராட்சி புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் முடிவடைய உள்ளது. திண்டிவனம் - சென்னை சாலையில் பி.எஸ்.என்.எல்., டவர் அருகே 6 ஏக்கர் பரப்பளவில், நகராட்சி சார்பில் 25 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, 3,110 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.இதில் 3,338 சதுர மீட்டர் பரப்பளவில் பஸ்கள் நிறுத்துவதற்காகவும், 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் 300 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டண கழிவறைகள் மற்றும் இலவச சிறுநீர் கழிப்பிடம், 300 சதுர மீட்டர் பரப்பளவில் கழிவுநீர் சேகரிக்கும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, எதிர்காலத்தில் பஸ் நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக ஒரு ஏக்கர் காலியாக விடப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 50 பஸ்கள் நிறுத்தவதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இதேபோல் 60 கடைகள், 4 ஏ.டி.எம்., மையங்கள், சைவம் மற்றும் அவைச உணவகங்கள், பயணிகள் காத்திருப்பு கூடம், காவல் கட்டுப்பாட்டு அறை, போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், புதிய பஸ் நிலையத்தைச் சுற்றி, மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே புகாதவாறு, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 80 சதவீத முடிவடைந்துள்ளது. நுழைவாயிலில் இரண்டு பக்கமும் ஆர்ச் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.மீதமுள்ள பணிகள் அனைத்தும் வரும் நவம்பர் மாத இறுதிக்குள் முடிந்து விடும் என நகராட்சி கமிஷனர் குமரன் தெரிவித்துள்ளார். விரைவில் பஸ் நிலையத்தை திறந்து வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
15-Oct-2024