விழுப்புரம்; விழுப்புரத்தில் முதல்வர் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, டி.ஐ.ஜி., தலைமையில் போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.விழுப்புரத்தில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்க வருகை தரும் முதல்வர் ஸ்டாலின், 28ம் தேதி காலை 10.00 மணிக்கு, ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பு அருகே அரசு சார்பில் கட்டியுள்ள கோவிந்தசாமி நினைவு மண்டபம், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கான மணிமண்டபத்தை திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.விழுப்புரத்தில் முதல்வர் பங்கேற்கும் அரசு விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., திஷாமித்தல் தலைமையில் நேற்று காவல் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் எஸ்.பி., சரவணன், ஏ.டி.எஸ்.பி.,க்கள் தினகரன், திருமால், ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா உள்ளிட்டோர், புதிதாக திறக்கப்பட உள்ள தியாகிகள் நினைவு மண்டபம் பகுதி மற்றும் அதனருகே அமைக்கப்பட்டுள்ள முதல்வருக்கான பிரமாண்ட விழாமேடை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள், பொது மக்கள், வாகனங்கள் வந்து செல்வதற்கான வழிகள் குறித்து ஆய்வு செய்தனர்.இதனையடுத்து, விழுப்புரத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வருகை தரும் தேசிய நெடுஞ்சாலை வாகன வழித்தடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் குறித்தும், விழுப்புரம் ஜானகிபுரம் பைபாஸ் பாலம் மற்றும் உள்ளிட்ட சுற்று பகுதிகளில் நேரில் பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.