பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான செம்மொழி நாள் விழா போட்டி
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான செம்மொழி நாள் விழா போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி செம்மொழி நாள் கொண்டாடப்பட உள்ளது. செம்மொழியின் சிறப்பையும், கருணாநிதியின் தமிழ்த் தொண்டினையும், மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில், 11, 12ம் வகுப்பு மாணவர்களுக் கும், கல்லுாரி மாணவர்களுக்கும், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.விழுப்புரம் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வரும் மே மாதம் 9ம் தேதி விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள் மறுநாள் 10ம் தேதி விழுப்புரம் அண்ணா அரசு கல்லுாரியிலும் நடக்கிறது.போட்டிகளில் வெற்றி பெறுவோருக்க வரும் ஜூன் 3ம் தேதி நடக்கும் செம்மொழிநாள் விழாவில், பரிசு தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள், தமிழ் வளர்ச்சித் துறையின் tamilvalarchithurai.tn.gov.in. இணையத்தில் பதிவிறக்கம் செய்தும் அல்லது தமிழ் வளர்ச்சித் துறை, உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பங்களை பெற்று, வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பங்கேற்கலாம்.அனைவருக்கும் மதிய உணவு மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள், மே 17ம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில போட்டியில் பங்கேற்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.