விபத்தில் இறந்த எஸ்.ஐ., குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலை விபத்தில் இறந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் குடும்பத்திற்கு, ரூ.30 லட்சம் நிவாரண தொகையை முதல்வர் அறிவித்துள்ளார்.விழுப்புரம் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில், விழுப்புரம் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துவந்த தமிழ்ச்செல்வன்,57; கடந்த 13ம் தேதி, பைக்கில் சென்றபோது, கார் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து, சிகிச்சை பலனின்றி கடந்த 24ம் தேதி உயிரிழந்தார். இந்த துயரமான செய்தியைகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இது தமிழ்ச்செல்வன் இறப்பு அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு, 30 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.