உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பாதாள சாக்கடை பள்ளத்தில் காஸ் லாரி சிக்கியதால் பரபரப்பு

பாதாள சாக்கடை பள்ளத்தில் காஸ் லாரி சிக்கியதால் பரபரப்பு

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை பள்ளத்தில், காஸ் சிலிண்டர் லோடு வாகனம் சிக்கியதால், பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் கே.கே.ரோடு பகுதியில் உள்ள தனியார் சமையல் காஸ் விநியோக நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு, சிலிண்டர் லோடு ஏற்றிய லாரி ஒன்று, நேற்று பகல் 12:00 மணியளவில் வந்தது. காஸ் சிலிண்டர்களை இறக்கிவிட்டு, காலி சிலிண்டர்களுடன் அந்த வாகனம் கே.கே.ரோடு வழியாக திரும்பச் சென்றது. மின்வாரிய குடியிருப்பு அருகே லாரி சென்ற போது, பாதாள சாக்கடை பள்ளத்தில் திடீரென சிக்கியது. இதனால், அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து கிரேன் மூலம் மீட்க முயன்றபோது, லாரி கவிழும் நிலை ஏற்பட்டது. உடனடியாக லாரியில் இருந்த காலி சிலிண்டர்கள் கீழே இறக்கப்பட்டு, பள்ளத்தில் இருந்த லாரி வெளியே மீட்கப்பட்டது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரத்தில் இருந்து கே.கே.ரோடு வழியாக சாலாமேடு, திருப்பாச்சனுார், தளவானுார் செல்லும் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இதேபோல், 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பஸ், வேன்கள் இயக்கப்படுகிறது. இதே பகுதியில், பாதாள சாக்கடை பள்ளங்களை சரிவர மூடாததால், வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி தவிக்கும் சம்பவம் தொடர்கிறது. எனவே, முக்கிய சாலையான கே.கே.ரோடு பகுதியில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க, பாதாள சாக்கடை பள்ளத்தை முறையாக மூடுவதற்கு, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ