மலட்டாறில் புதிய தடுப்பணை கட்டும் பணிகள் துவக்கம்: விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு
விழுப்புரம்: விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையையடுத்து, மலட்டாறில் ரூ.3.44 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி துவங்கி உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான மலட்டாறு விழுப்புரம் மாவட்டம், திருப்பாச்சனுார் பகுதியில் இருந்து பிரிந்து செல்கிறது. தென்பெண்ணை ஆற்றில் ஆண்டு தோறும் மழை வெள்ள நீர் சென்றாலும், அதிலிருந்து பிரிந்து செல்லும் மலட்டாறு மேடாக மாறியதால், அதிகளவில் வெள்ளம் வரும்போது மட்டும் தான் மலட்டாரில் தண்ணீர் செல்கிறது. மற்ற நேரங்களில் வரண்டு கிடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் துவங்கி புதுச்சேரி, கடலூர் மாவட்ட கிராமங்கள் வழியாக செல்லும் மலட்டாறு, கடலுார் மாவட்டம், சின்னக்காட்டுப்பாளையம் அருகே வங்க கடலில் கலக்கிறது. நீண்ட கால கோரிக்கை
விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாநில விவசாய பாசனம், நிலத்தடி நீராதாரமாக விளங்குவதால், மலட்டாற்றை துார் வாரி சீரமைக்க வேண்டும், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மலட்டாறில் புதிய தடுப்பணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. விழுப்புரம் அருகே கொங்கம்பட்டு கிராமத்தில், ரூ.3.44 கோடி மதிப்பில், புதிய தடுப்பணை கட்டும் பணிக்கு, நீர்வளத்துறை சார்பில் ஒப்பந்தம் விடப்பட்டு கட்டுமான பணி துவங்கி உள்ளது. தடுப்பணை
மலட்டாற்றின் குறுக்கே 70 மீட்டர் நீளம், 1.50 மீட்டர் உயரத்திலும் கான்கீரிட் கட்டமைப்புடன் புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. தமிழக அரசு தடுப்பணை கட்டும் பணியை கடந்த ஆண்டு அறிவித்தாலும், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான், கட்டுமான பணிகள் தாமதமாக துவங்கி நடந்து வருகிறது. தடுப்பணைக்கான அடித்தள கான்கிரீட் பணிகள் முடிந்து, அடுத்த கட்ட பணிகள் நடந்து வருகிறது. அணை கட்டும் பணிக்கு 1 ஆண்டு காலம் அவகாசம் உள்ளது. தற்போது 25 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதாகவும், அடுத்த 3 மாதங்களுக்குள் தடுப்பணை பணிகள் முடிக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மலட்டாற்றில் ஏற்கனவே பூவரசன்குப்பம், வீராணம் பகுதிகளில் தடுப்பணைகள் உள்ளன. அவைகள் நீண்டகால பயன்பாட்டால் வீணாகியுள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் புதிய தடுப்பணையால், சுற்று பகுதியில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும், விவசாயத்திற்கும் பயனுள்ளதாக அமையும்.
உடைந்த ஆற்றின் கரை சீரமைக்கப்படுமா
மலட்டாறில், கொங்கம்பட்டு பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வலதுபுற கரை உடைந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 300 மீட்டர் அளவில் உடைந்த கரை பகுதி வழியாக ஆண்டு தோறும் மலட்டாற்றில் இருந்து வெள்ள நீர் விவசாய நிலங்கள் வழியாக பாய்ந்து நிலங்களை சேதப்படுத்தி, தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. உடைபட்ட கரையை சீரமைக்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். புதிய அணை கட்டினாலும், உடைப்பு வழியாக ஆற்று நீர் வழிந்து வீணாகவே போகும் என்பதால், முதலில் உடைந்த கரை பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.