கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்; தமிழ்நாடு மாநில தொடக்கக் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில ஓய்வுபெற்றோர் சங்க பொருளாளர் கலியபெருமாள், மாவட்ட செயலாளர் அனந்தசயனன், பொருளாளர் மூர்த்தி முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடிகளுக்கு தனித்தனியாக பி.ஓ.எஸ்., இயந்திரம் வழங்கப்படுவதுடன், விற்பனையாளர்களுக்கு மொபைல் போன் வாங்கித் தர வேண்டும். விற்பனையாளர்களாக பணியில் சேருபவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 25 கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த வேலை நிறுத்தத்தால், மாவட்டத்தில் உள்ள 152 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூடப்பட்டது. அதில் பணிபுரிந்த சங்க பணியாளர்கள் 622 பேர் மற்றும் ரேஷன் கடை பணியாளர்கள் 1160 பேர் என மொத்தம் 1782 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மாவட்டத்தில் நகைக்கடன் வழங்குவது, ஜாதி, இருப்பிடம், வருவாய் சான்றிதழ் வழங்குவது, ரேஷன் கடைகளில் பொது விநியோகம் உள்ளிட்ட பணிகள் முற்றிலும் முடங்கியது.