உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஒன்றிய கூட்டங்களில் கவுன்சிலர்கள் மவுனம்; மக்கள் கடும் அதிருப்தி

ஒன்றிய கூட்டங்களில் கவுன்சிலர்கள் மவுனம்; மக்கள் கடும் அதிருப்தி

வானுார் ஒன்றியத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - வி.சி., என 27 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் ஒன்றிய சேர்மேனாக உஷா முரளியும், துணை சேர்மேனாக பருவகீர்த்தனா விநாயகமூர்த்தியும் பதவியில் உள்ளனர்.ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்து பேசவும், தீர்மானங்கள் நிறைவேற்றி அந்தந்த பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு ஒன்றிய கவுன்சிலர்களின் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். ஒவ்வொரு முறையும் நடக்கும் கவுன்சிலர்கள் கூட்டத்தில், ஒரு சில கவுன்சிலர்கள் மட்டுமே தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை முழு மூச்சாக பேசுகின்றனர். மற்ற கவுன்சிலர்கள் தலையாட்டி பொம்மையாக இருந்து விட்டு, கூட்டத்தின் இறுதியில் தீர்மான கோப்பில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்து விடுகின்றனர்.கவுன்சிலராக தேர்வான ஆரம்பக்கூட்டங்களில் அ.தி.மு.க., - வி.சி., பெண் கவுன்சிலர் மட்டும், பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து வெளிநடப்பு செய்து வந்தனர்.தற்போது கூட்டங்கள் தலைகீழாக மாறி விட்டது. வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ஏராளமான அடிப்படை பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக குப்பைகளை கொட்டுவதற்கு இடவசதி இல்லாமல், சாலையோரங்களில் தீ வைத்து கொளுத்துவது, ஆங்காங்கே சாலைகள் பெயர்ந்து கிடப்பது, குடிநீர் பிரச்னை என அடுக்கடுக்கான பிரச்னைகள் உள்ளது.பிரச்னைகள் குறித்து பேசுவதற்காகத்தான் கவுன்சிலர்களை பொதுமக்கள் தேர்வு செய்து அனுப்புகின்றனர். ஆனால், கவுன்சிலர்கள் தங்களுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறையோ 5 லட்சம் ரூபாயில் டெண்டர் பணி ஒதுக்கப்படுகிறது.கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து பேசினால், டெண்டர் பணி கிடைக்காமல் போய் விடும் என்ற அச்சத்தில் பல கவுன்சிலர்கள் மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து பேசுவதே கிடையாது என புகார் எழுந்துள்ளது. இதனால் கவுன்சிலர்கள் மீது பொது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை