உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதல்வர் குறித்த அவதூறு வழக்குகள்; விழுப்புரம் கோர்ட்டில் சண்முகம் ஆஜர்

முதல்வர் குறித்த அவதூறு வழக்குகள்; விழுப்புரம் கோர்ட்டில் சண்முகம் ஆஜர்

விழுப்புரம்; முதல்வர் குறித்து அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், விழுப்புரம் கோர்ட்டில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் ஆஜரானார்.விழுப்புரம், ஆரோவில், கோட்டக்குப்பம், கோலியனூர் நடந்த அ.தி.மு.க., பொதுக் கூட்டங்களில் முதல்வர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சண்முகம் மீது, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், அரசு வக்கீல் சுப்பிரமணியம், வழக்கு தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.இந்த 4 வழக்குகளின் விசாரணை, நேற்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, சண்முகம் நேரில் ஆஜராகினார்.அ.தி.மு.க., வக்கீல்கள் ராதிகா, தமிழரசன் ஆகியோர் ஆஜராகி, 'ஆரோவில், கோட்டக்குப்பம் வழக்குகளை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் பேசிய வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்யப்பட்டுள்ளது. அதன் மீதான உத்தரவு வரும் வரை, இவ்வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என வாதிட்டனர். கோலியனூரில் பேசிய வழக்கில், விசாரணைக்கு எடுத்த முறை தவறு என்றும், அதனை முறையாக விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதாகவும், அ.தி.மு.க., வக்கீல்கள் கூறினர். இந்த 4 வழக்குகளையும் விசாரித்த, மாவட்ட நீதிபதி மணிமொழி, விசாரணையை வரும் ஜன.3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.மேலும் ஒரு வழக்குகடந்த 25.7.2022ல் விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சண்முகம், தமிழக அரசு மற்றும் முதல்வரை அவதூறாக பேசியதாகவும், 18.9.2022ல் திருச்சிற்றம்பலம் கூட்ரோடில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வரை அவதூறாக பேசியதாக சண்முகம் மற்றும் சக்கரபாணி எம்.எல்.ஏ., மீது விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.அந்த 2 வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தது. சண்முகம், சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆஜராகினர். அ.தி.மு.க. வக்கீல்கள் ஆஜராகி, இவ்வழக்குகளை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளதாக கூறினர். விசாரித்த மாஜிஸ்ரேட் ராதிகா, அதற்கான உத்தரவு நகலை சமர்பிக்கும்படி கூறினார்.விசாரணையை டிச.5ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை