உள்ளூர் செய்திகள்

எம்.பி., பேச்சு

விழுப்புரம் : விழுப்புரம் வழியாக அமைக்கப்படும் இரட்டை ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென ஆனந்தன் எம்.பி., லோக்சபாவில் வலியுறுத்தி பேசினார். லோக் சபா கூட்டத்தில் கலந்து கொண்டு விழுப்புரம் தொகுதி எம்.பி., ஆனந்தன் பேசியதாவது: சென்னை முதல் கன்னியாகுமரி மற்றும் தென்பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டு முதல் விழுப்புரம் வரையிலும், விழுப்புரம் முதல் திருச்சி வரையிலும் நடைபெறும் இரண்டு வழிப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும். உளுந்தூர்பேட்டை முதல் கள்ளக்குறிச்சி வரையில் ஒரு புதிய ரயில் பாதையை அமைத்து என்னுடைய தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இதனால் உளுந்தூர்பேட்டையிலிருந்து சேலம், கோவை செல்லும் பயணிகள் பயன்பெறுவர். உளுந்தூர் பேட்டை ரயில் நிலையம் தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வழியாக செல்கின்ற விரைவு ரயில்கள் அனைத்தும் நிற்காமல் செல்கின்றன. இந்த ரயில் நிலையத்தின் அருகில் பழைய விமான தளம் அமைந்துள்ளது. இந்த தளத்தில் தான் இந்திய ராணுவ பயிற்சி மையம் அமைய உள்ளது. இந்த ரயில் நிலையத்தின் முக்கியத்துவம் கருதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் உளுந்தூர்பேட்டை நிலையத்தில் நிற்க ஆணையிட வேண்டும். கள்ளக்குறிச்சி முதல் சின்னசேலம் வரை ரயில் பாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. போதிய நிதியை ஒதுக்கி பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஆனந்தன் எம்.பி., லோக் சபாவில் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ