அரசு பள்ளிகளில் சாதனை மாணவர்களை உருவாக்கும் உடற்கல்வி இயக்குநர்
விழுப்புரம்,: விழுப்புரம், அனந்தபுரம் அரசு பள்ளிகளில், உடற்கல்வி இயக்குநர் தனது தீவிர ஈடுபாட்டில், சாதனை மாணவர்களை உருவாக்கி பெருமிதப் படுத்தி வருகிறார்.விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குநராக உள்ள மணிவண்ணன், பல அரசு பள்ளி மாணவர்களை விளையாட்டு வீரர்களாக தயார்படுத்தி சாதனை படைத்து வருகிறார். இவர், கடந்த 2014ம் ஆண்டு முதல் அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியபோது, கடந்த 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை, அப்போது பள்ளிக் கல்வித் துறையின் சார்பாக நடைபெற்ற குறுமைய, மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற கிராமப்புற பள்ளி மாணவர்களை விளையாட்டில் ஈடுபடுத்தி, ஆண்டு தோறும் 250 மாணவர்களுக்கும் மேல், போட்டியில் பங்கு பெறச்செய்து, தடகளம், நீச்சல், கைப்பந்து, கபடி, வலைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் வெற்றியும் பெற்று சாதித்துள்ளனர்.குறிப்பாக பவித்ரா, ஹேமலதா, குணசேகரன், சதீஷ், சவுமியா உள்ளிட்ட மாணவர்கள் மாவட்ட, மாநில போட்டிகளிலும் கலந்துகொண்டு, அரசு பள்ளிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இதனை பாராட்டி, உடற்கல்வி இயக்குநர் மணிவண்ணனுக்கு, அப்போதைய கலெக்டர் பாலசுப்ரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளார்.இதனையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு, ஆனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து, பணி மாறுதல் பெற்று, விழுப்புரம் காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பணியில் சேர்ந்து, மாணவர்களை தயார்படுத்தி சாதித்து வருகிறார் மணிவண்ணன்.காமராஜ் நகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும் குறுமையம், மாவட்ட போட்டிகள் மற்றும் முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில், பல மாணவர்களை பங்கெடுக்கச் செய்து வெற்றியும் பெற்றுள்ளனர். குறிப்பாக சயதுஅக்ரம், ஆடம்சில்வர்ஸ்டார், தேவா, கலைச்செல்வன், ஹரிஷ் உள்ளிட்ட மாணவர்கள் பலர் மாநில போட்டிக்கும் தேர்வாகியுள்ளனர். சர்வதேச போட்டியிலும் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் பிரகாஷ், ராமன் உள்ளிட்டோரும், விளையாட்டு போட்டியில் மாணவர்கள் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக உள்ளனர்.குறிப்பாக, தடை தாண்டி ஓட்டத்தில் பிளஸ் 1 மாணவர் ஏழுமலை மாநில போட்டியில் பங்கேற்று சாதித்தார். இப்போது, முதல்வர் கோப்பையிலும் தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதலில் அவர் முதலிடம் பிடித்துள்ளார்.பிளஸ் 1 மாணவர் மகாகணபதியும், மும்முறை தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றார். பிளஸ் 1 மாணவர் ரோகித் ஜிம்னாஸ்டிக் போட்டியில் தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பெற்று சாதித்துள்ளனார். முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், பள்ளி தலைமை ஆசிரியர் பாலாகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் ஊக்கமளித்து பாராட்டியுள்ளனர்.