உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பல்லவர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

பல்லவர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ராஜம்புலியூர் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றங்கரையில், செஞ்சி அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் சுதாகர், தமிழ்த்துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முகில், பச்சையப்பன் ஆகியோர் கள ஆய்வு செய்தனர். அப்போது, கல் செக்குடன் கூடிய பாறையில் மூன்றாம் நந்திவர்மன் கால கல்வெட்டு, இருந்ததை கண்டு பிடித்தனர். இது குறித்து பேராசிரியர் சுதாகர் கூறியதாவது: இங்குள்ள கல்வெட்டு, தெள்ளாறை வென்ற நந்திபோத்தரையரின் 13 வது ஆட்சியாண்டில் அங்குள்ள ஒரு சிவன் கோவிலுக்கு திருவிளக்கு ஏற்றுவதற்கு எண்ணை ஆழாக்கு அளவில் அளிக்க செய்துவித்த செக்கு, என்ற பொருளில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் நந்திவர்மனை, தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் என்று பல கல்வெட்டுகள் குறிப்பிட்டுள்ள நிலையில் இக்கல்வெட்டு தெள்ளாறை வென்ற நந்திவர்மன் என்று குறிக்கிறது. நந்திவர்மனின் 13 ஆவது ஆட்சியாண்டு என்பது, பொது ஆண்டு கி.பி. 859 ஆகும். மேலும் இங்கு ஒரு பல்லவர்கால சிவாலயம் இருந்ததற்கான தடயம் கல்வெட்டில் காணக்கிடைக்கிறது. கல்வெட்டில் சில இடங்கள் சிதிலமாகி இருப்பதால் முழுமையான தகவல் பெற இயல வில்லை. செஞ்சி பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க பல தடயங்களில் ஒன்றாக இந்த கல்வெட்டு குறிக்கப்பெறுகிறது. இக்கல்வெட்டுகளை ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டும் என அப்பகுதிமக்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ