எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பாலம் பணிகளை ஜனவரிக்குள் முடிக்க திட்டம்
விழுப்புரம் : விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் பைபாஸ் மேம்பாலப்பணி, மழையால் தாமதமாகி வந்த நிலையில், தற்போது பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, ஜனவரிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.விழுப்புரம் புறவழிச்சாலையில், கலெக்டர் வளாகம் பின் பகுதி அருகே, எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நான்கு சாலைகள் சந்திக்கின்றன. இப்பகுதியை, ஏராளமான வாகனங்கள் கடந்து செல்வதால், அடிக்கடி விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, நான்கு வழிச்சாலை அமைத்ததில் இருந்து, அந்த இடத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதையடுத்து, ரூ. 23 கோடி மதிப்பில் எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (நகாய்) நிதி ஒதுக்கியது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மேம்பாலம் கட்டுமான பணி தொடங்கியது.சென்னை - திருச்சி மார்க்கத்தில், 1 கிலோ மீட்டருக்கு இருபுறமும் இணைப்புச் சாலையுடன் கூடிய மேம்பாலம் கட்டுமான பணி கடந்தாண்டு தொடங்கியது. அங்கு 690 மீட்டர் தொலைவிற்கு மேடான இணைப்பு சாலையும், சாலை சந்திக்கும் மையத்தில் தலா 28 மீட்டர் நீளம், அகலத்தில், கீழே வாகனங்கள் செல்லும் யு.வி.பி., கான்கிரீட் பாலத்திற்கான கட்டுமானம் நடந்து வருகிறது. மழை போன்ற காரணங்களால் இப்பணி மிகவும் தாமதமாகி வருவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்தது.இந்நிலையில் தற்போது, பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, சாலை சந்திப்பு மையத்தில் 28 மீட்டர் அகலத்தில் உயரமான யு.வி.பி., கான்கிரீட் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதனை இணைக்கும் இணைப்பு சாலை பணி நடந்து வருகிறது.சென்னை மார்க்கத்தில் 300 மீட்டர் தொலைவுக்கு இணைப்பு சாலை அமைக்க, சைடு வால் கட்டப்பட்டு, அதன் மேல் கிராவல் ஜல்லி கொட்டி நிரப்பி சாலை போட்டு வருகின்றனர்.இதேபோல், திருச்சி மார்க்கத்தில் 400 மீட்டர் தொலைவுக்கு சைடு வால் கட்டப்பட்டு, அதன் மீது மண் நிரப்பி சமப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 70 சதவீதம் அளவில் இணைப்பு சாலை பணிகள் முடிந்துள்ளது.இதனுடன், பாலத்தின் இருபுறமும் கான்கிரீட் கால்வாய் மற்றும் சர்வீஸ் சாலைகள் சீரமைக்கும் பணிகள் மெதுவாக நடந்து வருவதால், நான்கு வழிச்சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.இது குறித்து,'நகாய்' திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'எல்லீஸ்சத்திரம் சந்திப்பு மேம்பாலப்பணிகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. இடையே மழையின் காரணமாக, பணிகள் அடிக்கடி பாதிக்கப்பட்டன.தற்போதைய பெஞ்சல் புயல் மழையால் 20 நாட்கள் பணிகள் நடக்கவில்லை. மீண்டும் பணிகள் துவங்கியுள்ளது. தற்போது 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதால், ஜனவரி மாதத்தில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டு பணிகள் வேகமாக நடந்து வருகிறது' என்றனர்.