நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: விவசாயிகள் புகார்
விழுப்புரம்; விழுப்புரம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.பாரதீய கிசான் சங்கத்தினர் அளித்துள்ள மனு:விழுப்புரம் அடுத்த ஆனாங்கூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கூடார வசதியின்றி, நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. விவசாயிகள் கொண்டு செல்லும் நெல் மூட்டைகளை எடை போடுவதற்கு 40 கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு 45 ரூபாய் வீதம் வசூலிக்கின்றனர். செலவிற்கு பணம் தருபவர்களுக்கு மட்டுமே எடை போட முடியும் என கூறுகின்றனர்.இதுகுறித்து, கடந்த வாரம் புகார் அளித்தபோது, அதிகாரி ஒருவர், எங்களை அழைத்துச் சென்று, எடை போட்டு நெல்லை எடுப்பதாக கூறினார். அப்போது, கலெக்டர் அலுவலகத்திற்கு ஏன் சென்றீர்கள் என்று கேட்டு சிலர் மிரட்டினர்.இடைத் தரகர்கள் மூலம் நெல் கொள்முதல் நடக்கிறது. ஆகவே, கொள்முதல் நிலையத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்தும், இடவசதியும் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.