உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பனிப்பயறுக்கு புவிசார் குறியீடு கிடைக்காததால் விவசாயிகள்... ஏமாற்றம்; மாவட்ட அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டு முயற்சி எடுப்பார்களா?

பனிப்பயறுக்கு புவிசார் குறியீடு கிடைக்காததால் விவசாயிகள்... ஏமாற்றம்; மாவட்ட அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டு முயற்சி எடுப்பார்களா?

திண்டிவனம்: திண்டிவனம் பனிப்பயறுக்கு புவிசார் குறியீடு அறிவிப்பு வெளியாகாதது, விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.விவசாயத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் கடந்த 2023-24 சட்டசபை வேளாண் பட்ஜெட் தாக்கலின் போது, சாத்துார் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சு வெல்லம், துாத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலுார் கோட்டிமுளை கத்தரி, மதுரை செங்கரும்பு, திண்டிவனம் பனிப்பயறு, விருதுநகர் அதலைக்காய் உள்ளிட்ட 15 வகை வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக அரசு 45 லட்சம் ரூபாய் நிதி ஒப்பளித்து, அரசாணை வழங்கி அதற்கான பணியை துவக்கி உள்ளதாக அறிவித்தார். கடந்த 2024-25 வேளாண் பட்ஜெட்டில், நல்லுார் வரகு (கடலுார்), வேதாரண்யம் முல்லை (நாகப்பட்டினம்), நத்தம் புளி (திண்டுக்கல்), ஆயக்குடி கொய்யா (திண்டுக்கல்), கப்பல்பட்டி கரும்பு முருங்கை (திண்டுக்கல்) ஆகிய 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறித்து அறிவிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்த திண்டிவனம் பனிப்பயறுக்கு புவிசார் குறியீடு குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்த வரை, திண்டிவனம், செஞ்சி, விக்கிரவாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பனிப்பயறு விளைச்சல் அதிகம் உள்ளது. மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் ஏக்கரில் பனிப்பயறு பயிரிடப்படுகிறது.கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் திண்டிவனம் மார்க்கெட் கமிட்டிக்கு 320 டன் பனிப்பயறு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதே போல் விக்கிரவாண்டி, செஞ்சி, அவலுார்பேட்டை பகுதியில் மார்க்கெட் கமிட்டிக்கு அதிக அளவில் பனிப்பயறு விவசாயிகள் கொண்டு வந்துள்ளனர். ராஜஸ்தான், உத்திரப்பிரேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளுக்கு விழுப்புரம் மார்க்கெட் கமிட்டி வியாபாரிகள் மூலம் பனிப்பயறு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு, திண்டிவனம் பனிப்பயறுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என திண்டிவனம் பனிப்பயறு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை கிடைக்கவில்லை.திண்டிவனம் பனிப்பயறுக்கு புவிசார் குறியீடு வழங்குவது குறித்து, நபார்டு மூலம் நடத்திய கள ஆய்வு தரவுகள் அனைத்தும் மத்திய அரசுக்கு அறிக்கை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புவிசார் குறியீடு ஒரு பொருளின் பெயரைக் குறிப்பிட்டால் அந்த பகுதியை அடையாளம் காணும் அளவில் இருக்கும். பனிப்பயறுக்கு புவிசார் குறியீடு வழங்கும் பட்சத்தில் திண்டிவனம் பெயர் தனித்துவம் பெறும்.புவிசார் குறியீடு கிடைத்துவிட்டால், மார்க்கெட் கமிட்டிகளில் நிலையான விலை நிர்ணயம் செய்யப்படும், தரமான பனிப்பயறு கிடைக்கும். வெளிமாநில வியாபாரிகள் மூலம் பனிப்பயறு அதிக அளவில் கொள்முதல் செய்யப்படும். திண்டிவனம் பனிப்பயறுக்கு புவிசார் குறியீடு விரைவில் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம், மாவட்டத்திலுள்ள அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டு முயற்சி எடுக்க வேண்டும் என்பதே பனிப்பயிறு விவசாயிகளின் ஒட்டு மொத்த கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை