கோவில்களில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள்: கலெக்டர் ஆலோசனை
விழுப்புரம்: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடக் கவுள்ள அமாவாசை திருவிழா, திருவக்கரை சந்திரமவுலிஸ்வரர் கோவில் பவுர்ணமி விழாவை யொட்டி, பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் பழனி தலைமை தாங்கி, கூறியதாவது:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் வரும் 30ம் தேதி அமாவாசை திருவிழாவும், வரும் ஜன., 13ம் தேதி திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் பவுர்ணமி ஜோதி விழா நடக்கிறது. பொதுமக்கள், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஊராட்சி ஒன்றியம் சார்பில் அடிப்படை வசதிகள், பஸ் வசதிகள், கோவில் செல்லும் வழிகளில் அதிகளவு குப்பை தொட்டிகள் அமைப்பதோடு, சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற துப்புரவு பணியாளர்களை பணியமர்த்த வேண்டும்.போலீசார், பாதுகாப்பு ஒத்திகை நடத்துவதோடு, தற்காலிக பஸ் நிலையங்கள், கிராம தெருக்கள், கோவில் வளாகம் உட்பட இதர இடங்களில் திருட்டு, வழிப்பறி, அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசாரை நியமித்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட வேண்டும்.ஊஞ்சல் உற்சவம் நடக்கும் நேரத்தில், கோவிலின் ஊஞ்சல் மண்டபம் மற்றும் கிழக்கு மண்டபத்தின் மேற்பகுதியில் யாரும் ஏறாத வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கனரக வாகனங்கள் விழா நாட்களில் செல்லாதவாறு கண்காணித்திட வேண்டும்.மின்சாரம் தடையின்றி 24 மணி நேரம் வழங்க வேண்டும். மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் உட்பட தீயணைப்பு, சுகாதார துறைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார். இதில், திண்டிவனம் சப்- கலெக்டர் திவ்யானஷூ நிகம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், துணை கலெக்டர் (பயிற்சி) பிரேமி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.