துாண்டில் முள் வளைவு அமைக்க கோரி இ.சி.ஆரில் மீனவர்கள் சாலை மறியல்
கோட்டக்குப்பம்; துாண்டில் வளைவு அமைக்கக் கோரி, இ.சி.ஆரில் மீனவ கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட நடுக்குப்பம், சோதனைக்குப்பம் கிராம மீனவர்கள் தங்கள் பைபர் படகுகளை நிறுத்துவதற்காக துாண்டில் முள் வளைவு அமைக்கக் கோரி கடந்தாண்டு டிசம்பர் மாதம் இ.சி.ஆரில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த அமைச்சர் பொன்முடி விரைவில் துாண்டில் வளைவு அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். ஆனால், இதுவரை துாண்டில் முள் வளைவு அமைத்து தரவில்லை.இதனைக் கண்டித்து நடுக்குப்பம் மற்றும் சோதனைக்குப்பம் கிராம மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் நேற்று காலை 9:30 மணிக்கு, சென்னை-புதுச்சேரி இ.சி.ஆரில் கோட்டக்குப்பம் ரவுண்டானா சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது.தகவலறிந்த டி.எஸ்.பி., சுனில் மறியலில் ஈடுபட்டவர்களிடம், கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசுவதாக உறுதி அளித்தார். அதனையேற்று காலை 10:00 மணிக்கு மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.