தீவன அபிவிருத்தித் திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு
விழுப்புரம், : அரசின் தீவன அபிவிருத்தி திட்டத்தில் விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத்தில், கறவை மாடுகளின் உற்பத்தித்திறன் மற்றும் இனப்பெருக்கத் திறனை அதிகரிப்பதற்கு தேவைப்படும், பசுந்தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்காக, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் இந்தாண்டு தீவன அபிவிருத்தித் திட்டம் (2024-25), 3 நிலைகளில் செயல்படுத்தப்பட உள்ளது.கால்நடை வளர்க்கும் விவசாயிகள், பயனடைகின்ற வகையில், நீர் பாசன வசதியுள்ள நிலப்பகுதியில் (இறவை) தீவனப் பயிர்களை சாகுபடி செய்திட 140 ஏக்கரில் குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் படி, தானிய வகை தீவனப் பயிர்களான தீவனச்சோளம் கோ.எப்.எஸ்., 29 ரக விதைகள் அடங்கிய 375 கிராம் மினி கிட்டுகளையும் மற்றும் பயிறுவகை தீவனப் பயிர்களான வேலிமசால் விதைகள் 500 கிராம் மினி கிட்டுகள். அதற்கான ரசாயன உரங்களும், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் தங்களது 25 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்வதற்காக 100 சதவீதம் மானியமாக வினியோகிக்கப்பட உள்ளது.மானாவாரி நிலப்பகுதிகளில் உள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் பயன்பெற மானாவாரி தீவனச் சோளத்துடன் தட்டைப்பயிறு வளர்க்கும் திட்டத்தின் கீழ் சாகுபடி செய்ய 6 கிலோ தீவன சோள விதையும், 2 கிலோ தட்டைப்பயிறு விதையும், இடுபொருட்களாக 100 சதவீதம் மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 50 சதவீதம் மானியத்துடன் 200 மின் விசையில் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் பயனாளிகளுக்கு வழங்க உள்ளது.இந்த திட்டங்களின் மூலம் பயன்பெற கால்நடை வளர்ப்பில் ஈடு பட்டுள்ள விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி விண்ணப்பிக்கலாம்.தாழ்த்தப்பட்ட, பழங்குடி சிறு,குறு விவசாயிகளுக்கு 30 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.