ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான நிதி பாதியாக... குறைந்தது; மாவட்டத்தில் ஒருவருக்குகூட முழுமையாக கிடைக்கவில்லை
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு நுாறு நாள் வேலைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட, 50 சதவீதத்திற்கும் மேல் நடப்பாண்டு குறைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பதிவு செய்துள்ள 5.12 லட்சம் தொழிலாளர்களில் ஒருவருக்குக்கூட, இதுவரை 100 நாட்கள் முழுமையாக வேலை கொடுக்கப்படவில்லை. மத்திய அரசு சார்பில், 2006-2007ம் நிதியாண்டு நுாறு நாள் வேலைத் திட்டத்தை தமிழகத்தில் முதல் கட்டமாக விழுப்பு ரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 688 கிராம ஊராட்சிகளில் உள்ள 2,286 கிராமங்கள் 1288 தொகுப்புகளாக உருவாக்கப்பட்டு, இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2024---25ம் ஆண்டில், மாவட்டத்தில் ஒரு கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 166 மனித சக்தி நாட்கள் வேலை வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. அந்த இலக்கையும் தாண்டி கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை ஒரு கோடியே 78 லட்சத்து 62 ஆயிரத்து 787 மனித சக்தி நாட்களுக்கு வேலை வழங்கப்பட்டது. தமிழகம் முழுதும் 30.61 கோடி மனித சக்தி நாட்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது. அதில் 15ல் ஒரு பங்கு விழுப்புரம் மாவட்டத்திற்கு கிடைத்தது. இதன் மூலம் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமப்புற மக்களுக்கு 600 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. மத்திய அரசு இந்தாண்டு தமிழகத்திற்கு 12 கோடி மனித சக்தி நாட்கள் மட் டுமே ஒதுக்கியுள்ளது. அதில், விழுப்புரம் மாவட்டத்துக்கு 81 லட்சம் வேலை நாட்கள் மட்டும் தான் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கு 272 கோடி ரூபாய் மட்டும் தான் ஊதியமாகக் கிடைக்கும். கடந்தாண்டு ஊதியத்தில் பாதிகூட கிடைக்க வாய்ப்பில்லை. திண்டிவனம் சட்டசபை தொகுதி, ஒலக்கூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 52 ஊராட்சிகளைச் சேர்ந்த 25 ஆயிரத்து 132 குடும்பங்கள், மரக்காணம் ஒன்றியத்தில் 56 ஊராட்சிகளைச் சேர்ந்த 35 ஆயிரத்து 545 குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒலக்கூர் ஒன்றியத்தில் கடந்த ஜூன் மாதம் வரை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 99 மனித சக்தி நாட்களும், மரக்காணம் ஒன்றியத்தில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 103 மனித சக்தி நாட்களும் வேலை கொடுக்கப் பட்டுள்ளன. இரு ஒன்றியங்களிலும் சேர்த்து, 7.28 கோடி ரூபாய் மட்டுமே இத் திட்டத்தில் செலவிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒலக்கூர் ஒன்றியத்தில் 558 குடும்பங்களும் , மரக்காணம் ஒன்றியத்தில் 191 குடும்பங்களும் 100 நாட்கள் வேலை செய்யும் வாய்ப்பை பெற்றன. இந்த ஆண்டு இதுவரை ஒரு குடும்பம்கூட முழுமையாக 100 நாட்கள் வேலை பெறவில்லை. மாவட்டத் தில், கடந்தாண்டு நுாறு நாள் வேலைத் திட்டத்தில், 600 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், நடப்பாண்டு 272 கோடி ரூபாய் மட்டும்தான் ஊதியமாகக் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், கிராமப் புற ஏழைகள் நுாறு நாள் வேலை கிடைக்காமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. -நமது நிருபர்-