எரிவாயு தகன மேடை திட்டப் பணி சுணக்கத்தால்... அவதி; பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை தேவை
விழுப்புரம்: விழுப்புரத்தில் ரூ.1.54 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகராட்சி எரிவாயு தகன மேடை திட்டப்பணியை முழுமைபடுத்தி, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. விழுப்புரம் நகராட்சி பகுதி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்காக, இறுதி சடங்கு மேற்கொள்வதற்கு நவீன எரிவாயு தகன மேடை, விழுப்புரம் கே.கே.ரோடில், 'முக்தி' என்ற பெயரில் கட்டப்பட்டு, நகராட்சி, ரோட்டரி பங்களிப்புடன் குறைந்த கட்டணத்தில் பயன்பாட்டில் உள்ளது. இதே போல், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு கிழக்கு பகுதியில் உள்ள நகராட்சி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் பயன்பாட்டிற்காக, புதிய எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்படி, விழுப்புரம் நகராட்சி சார்பில் ரூ.1.54 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கி, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் துவங்கியது. விழுப்புரம் கிழக்கு பாண்டிரோட்டில் மகாராஜபுரம் ஹவுசிங் போர்டு அருகே உள்ள நகராட்சி இடத்தில் இந்த புதிய தகன மேடை திட்டப்பணி நடந்தது. நகராட்சி நிதியில், ரோட்டரி நிர்வாகத்தின் மேற்பார்வையில் அதற்கான கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நவீன எரிவாயு தகன மேடைக்கான நவீன கட்டடம், எரிவாயுவால் இயங்கும் தகன மேடை கட்டமைப்புகள், புகை போக்கி கோபுரம் உள்ளிட்டவற்றுக்கான கட்டுமான பணிகள் நடந்து முடிந்தன. ஆனால் சுற்று சுவர் கட்டடம், மின் கட்டமைப்புகள், நுழைவு வாயில் கட்டமைப்பு, வாகன நிறுத்துமிடம், சிறிய பூங்கா போன்ற இறுதி கட்ட பணிகள் நடக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால், விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுப்புற மக்கள் நீண்ட தொலைவு, கே.கே.ரோடு தகன மையத்திற்கு சென்று அவதிப்படுவதோடு, போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் ஏற்படுகிறது. கடந்தாண்டு நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் முடிந்து ஓரிரு மாதத்தில் திறக்கப்படும் என்று கூறிச்சென்றார். ஆனால், பல மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இங்கு, தகனம் செய்வதற்கான கட்டமைப்பு பணிகள் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இறுதி கட்ட பணிகள் முடிக்கவும், நகராட்சி மண்டல நிர்வாக அதிகாரியிடம் ஒப்புதல் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதால், பணிகள் முடிந்தும், திறக்கப்படாமல் உள்ளதாக ஒப்பந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்தனர். இது குறித்து, அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நவீன எரிவாயு தகன மேடை திட்டப் பணிகள், 90 சதவீதம் முடிந்துவிட்டது. நிதி நெருக்கடியால் இடையே தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு பணிகள் நடக்கிறது. தற்போது, ரூ.30 லட்சம் மதிப்பில் சுற்றுசுவர், நுழைவு வாயில் போன்ற இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி நடக்கிறது. இரு மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்,' என்றனர்.