சிறுதானிய சாகுபடிக்கு அரசு மானியம்
விக்கிரவாண்டி; காணை வட்டாரத்திலுள்ள விவசாயிகள் சிறு தானிய சாகுபடி செய்தால் அரசு மானியம் பெறலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தி தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு: காணை வட்டாரத்தில் ஆண்டுதோறும் 3200 ெஹக்டர் பரப்பளவில் கம்பு, தினை, கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. வேளாண்மை துறை மூலம் காணை வட்டாரத்தினை சிறு தானிய மண்டலமாக தேர்வு செய்து, தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இந்தாண்டிற்கு ரூ.9.24 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் தினை, கேழ்வரகு, சாமை ,வரகு உள்ளிட்ட குறு தானியங்கள் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1600 பின்னேற்பு மானியமும் , மாற்றுப்பயிர் திட்டத்தில் இடுபொருட்கள் மற்றும் அறுவடை கூலிக்காக ரூ.1250 மானியமும் வழங்கப்படுகிறது. சிறு தானிய விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் உழவர் செயலி மூலம் முன்பதிவு செய்து வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.